சஹாரா தமிழ்

ads

வியாழன், 9 பிப்ரவரி, 2017

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தரலாம் : ஓய்வு நீதிபதி ராஜேஸ்வரன் அறிவிப்பு...


சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக மக்கள் புகார் தரலாம் என, விசாரணை கமிஷன் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் அறிவித்துள்ளார். கலவரம், வன்முறை மற்றும் காவல்துறையினரின் அத்துமீறல் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்திய பின் அந்த அறிக்கயைானது மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பின் அரசிடம் சமர்பிக்கப்படும் என்றார். இன்று சென்னை மெரினா மற்றும் அதனை சுற்றி வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியதளர்களிடம் பேசிய நீதிபதி ராஜேஸ்வரன் சென்னை மட்டுமின்றி  கோவை, மதுரை, அலங்காநல்லூர் பகுதிகளிலும் விசாரணை நடத்த உள்ளதாக குறிப்பிட்டார். வன்முறை மற்றும் காவல்துறை அத்துமீறலில் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள விசாரணை கமிஷன் அலுவலகத்தில் புகார் தரலாம் என்றார். புகார் தருவது எப்போது என்று பத்திரிக்கையில் வெளியிடப்படும் என கூறினார். நடந்த சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் வாக்குமூலம் அளிக்கலாம் என்றார்.

முன்னதாக ஜல்லிக்கட்டை வலியுறுத்தி மெரினா கடற்கரையில் மாபெரும் தன்னெழுச்சி போராட்டம் நடந்தது. போராட்டத்தின் இறுதியில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக கூறி காவல்துறைியனர் நடத்திய தடியடியால் வன்முறை வெடித்தது. இதில் மெரினாவை சுற்றியுள்ள நடுக்குப்பம், மாட்டாங்குப்பம் பகுதிகள் காவல்துறையினராலேயே சூறையாடப்பட்டன. இதனையடுத்து இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணை இன்று துவங்கியது. மெரினா கடற்கரை அருகேயுள்ள விவேகானந்தர் இல்லம் பகுதியில் விசாரணை நடத்தப்பட்டது. வன்முறையில் கடுமையாக பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதியில் நீதிபதி ராஜேஸ்வரன் நேரில் ஆய்வு நடத்தினார். மீன்சந்தை பகுதிகளில் மீனவர்களிடம் வன்முறை தொடர்பாகவும் நீதிபதி ராஜேஸ்வரன் ஆய்வு நடத்தினார்.

தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால் வேறு நாட்டில் குடியேறமாட்டேன்! ஏ.ஆர்.ரகுமான்


தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால் வேறு நாட்டில் குடியேறமாட்டேன் என்று கனடா மேயருக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பதில் தெரிவித்து உள்ளார். கனடா நாட்டின் டொராண்டோ நகர மேயர் அழைப்பின் பேரில் இசைநிகழ்ச்சி நடத்த கடந்த சனிக்கிழமை ரஹ்மான் கனடா சென்றார். டொரண்டோவில் அவர் தலைமையில் 100 இசைக்கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்பாக அவர் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தமிழில் பேசத் தொடங்கினார்.

அப்போது அங்கிருந்த தமிழர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய டொரண்டோ மேயர், கனடாவில் குடியேறும்படி ரஹ்மானுக்கு அன்பு அழைப்பு விடுத்தார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில் பதிலளித்துள்ள ரஹ்மான், தான் தமிழகத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வேறு நாட்டில் குடியேற விருப்பமில்லை என்று கூறியுள்ளார். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானை கெளரவிக்கும் விதமாக கனடா அரசு ஒரு தெருவுக்கு அல்லா ராகா ரஹ்மான் என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'யாருக்கு ஆதரவு என்பதை நாளை அறிவிப்போம்': மனிதநேய ஜனநாயக கட்சி அறிவிப்பு..!பிப்.09,. தங்களுடைய ஆதரவு யாருக்கு என்பதை நாளை அறிவிப்போம் என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரான M.தமிமுன் அன்சாரி MLA தெரிவித்துள்ளார். மனிதநேய ஜனநாயக கட்சியை துவக்கிய தமிமுன் அன்சாரி,கட்சி துவங்கிய ஒரு மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து நாகப்பட்டினம் தொகுதியில் வென்றார்.

 இந்நிலையில் தற்போதைய பரபரப்பான சூழலில் தமிமுன் அன்சாரியின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.இதற்கு பதிலளித்துள்ள மனித நேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரான தமிமுன் அன்சாரி மற்றும் அதன் மாநில நிர்வாகிகள் நாளை தங்கள் கட்சியின் முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 நாளை முடிவை அறிவிப்பதாக தமிமுன் அன்சாரி கூறுவதை வைத்து பார்க்கும் போது,அவர் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதில் இருந்து மஜக எடுக்கும் அனைத்து முடிவுகளும் முதிர்ந்த அரசியல் என்று அனைவராலும் பேசப்படுகிறது...

வியாழன், 20 அக்டோபர், 2016

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த மே மாதம் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா அதிகளவில் நடைபெற்றது பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் சீனிவேல் எம்எல்ஏவாக பதவி ஏற்பதற்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இந்த தொகுதியும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் காலியாக இருந்த திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 26ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதே தேதியில் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த 4 தொகுதியிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அக்கட்சி சார்பில் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் தேர்லில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அரவக்குறிச்சி தொகுதியில் வி.செந்தில்பாலாஜி, தஞ்சாவூர் - எம்.ரெங்கசாமி, திருப்பரங்குன்றம் - ஏ.கே.போஸ், நெல்லித்தோப்பு- ஓம்சக்தி சேகர் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிக்கு ஏற்கனவே அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் எம்எல்ஏ ரெங்கசாமி ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் மீது செங்கல் வீசி தாக்குதல்...

மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் செங்கல் வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய கனரகத் தொழிற்சாலை கள் மற்றும் பொதுத் துறை நிறு வனங்கள் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ. இவர் மேற்குவங்க மாநிலம் அசன்சால் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து தனது கட்சியினரை விடுவிப்பதற்காக தொண்டர்களுடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.

அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க, வழியில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அசன்சாலில் திரிணமூல் காங்கிரஸ் முக்கிய தலைவர் மலய் கடாக்கின் வீட்டின் அருகே, அமைச்சரின் கார் தடுத்து நிறுத்தப்பட்டபோது, இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதில், அமைச்சரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன. அமைச்சரை நோக்கி திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் செங்கற்கள் உள்ளிட்டவற்றை வீசி தாக்கினர். இதில் அமைச்சர் காயமடைந்ததாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக, இரு கட்சிகளையும் சேர்ந்த 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, துர்காபூர்-அசன்சால் போலீஸ் கமிஷனர் எல்.என்.மீனா தெரி வித்தார்.

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமனம் : தமிழக அரசு அவசர சட்டம்


சென்னை: உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அவசர சட்டத்தை தமிழக கவர்னர் நேற்று பிறப்பித்தார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு நள்ளிரவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து 28 நாட்களாக மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் கடந்த மாதம் அப்போலோவுக்கு சென்று முதல்வரை பார்த்தார். இதன்பின், முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்த அனைத்து துறைகளும், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டங்களுக்கும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமே தலைமை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் 10.35 மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் தற்போதுள்ள பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு மேலும் 4 வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான அவசர சட்டம் பிறப்பிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசிதழில், கவர்னர்  வித்யாசாகர் ராவ் நேற்று மாலை ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994-ஐ திருத்துவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாததாலும், தற்போது எழுந்துள்ள சூழ்நிலையில் அவசர சட்டம் பிறப்பிப்பது அவசியமாகிறது. இந்த அவசர சட்டம், தமிழ்நாடு பஞ்சாயத்துகள் 3வது திருத்த அவசர சட்டம் 2016 என்று அழைக்கப்படும். இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. மேலும், மாநகராட்சிகள், நகராட்சிகள் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வர அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. இந்த சட்டத் திருத்தம், தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் (மூன்றாம் திருத்தம்) அவசர சட்டம் 2016 என்று அழைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து சட்டத்துறை செயலாளர் (பொறுப்பு) எஸ்.எஸ்.பூவலிங்கம், தமிழக அரசிதழில் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றின் கவுன்சிலர்கள் அல்லது வார்டு உறுப்பினர்களின் பதவிக்கு சாதாரணமாக ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பாணை வெளியிட்டது. இதற்கிடையே இந்த அறிவிப்பாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 4ந் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பாணையை பிறப்பிக்க வேண்டும். டிசம்பர் 31ந் தேதிக்கு மிகாமல் கூடிய விரைவில் அந்தத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான பதவி காலம் விரைவில் முடிய இருப்பதாலும், 5 ஆண்டு கால பதவி காலத்தை மேலும் நீட்டிக்க முடியாது என்பதாலும், உள்ளாட்சிகளை நிர்வகிப்பதற்காக, தேர்தல் முடியும் வரை தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், மாநில தேர்தல் அதிகாரிகளான நகராட்சி நிர்வாக கமிஷனர், பேரூராட்சிகள் இயக்குனர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியான சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் உள்ளாட்சி தேர்தல் நடந்து கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

எனவே உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு உள்ளாட்சி தேர்தல் முடியும் வரையிலோ அல்லது டிசம்பர் 31ந் தேதி வரையிலோ, இதில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை தனி அதிகாரிகளை அரசு நியமிப்பதற்கு ஏற்ற வகையில் அதற்கான சட்டத்தை திருத்துவதென்று அரசு முடிவு செய்கிறது. அதுபோல, கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகியவற்றின் வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கான தேர்தல் முடியும் வரையிலோ அல்லது டிசம்பர் 31ந் தேதி வரையிலோ, இதில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை தனி அதிகாரிகளை அரசு நியமிப்பதற்கு ஏற்ற வகையில் அதற்கான சட்டத்தை திருத்துவதென்று அரசு முடிவு செய்கிறது. இந்த அவசர சட்டம், அரசின் முடிவை நடைமுறைப்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம், அதிகாரிகளின் கைக்கு சென்றுள்ளது.

ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்குவது சாத்தியமில்லை: தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி

புதுடெல்லி: பாராளுமன்ற, மாநில சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த தயாராக இருக்கிறோம். ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்குவது சாத்தியமில்லை என்று தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி கூறினார்.

சர்வதேச வாக்காளர் விழிப்புணர்வு குறித்த 3 நாள் கருத்தரங்கு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் 27 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் கலந்துகொண்டு அவரவர் நாடுகளில் பின்பற்றப்படும் தேர்தல் நடைமுறைகள் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றனர்.

இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்த பின்பு, தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதியை நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது, பாராளுமன்றம் மற்றும் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த பரிந்துரை செய்து கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி எழுதிய கடிதம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நஜீம் ஜைதி கூறியதாவது:-

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு மனதுடன் இதுபோல் ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தலை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டால் அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

அதே நேரம் மத்திய அரசும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி ஆதாரம் உள்ளிட்ட அனைத்து வித உதவிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு படைகளை ஒதுக்கித்தரவேண்டும். ஏனென்றால் இந்த தேர்தல்களுக்காக அதிக அளவில் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டியது இருக்கும். அவற்றை வாங்குவதற்கு அதிக நிதியும் (ரூ.9 ஆயிரம் கோடி) தேவைப்படும். இதற்கு சம்மதம் தெரிவித்தால் ஒரே நேரத்தில் பாராளுமன்ற, மாநில சட்டசபைகளுக்கு தேர்தலை நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு 5 மாநிலங்களுக்கு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுமா? அல்லது தனித்தனி தேதிகளில் இருக்குமா? என்ற இன்னொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கும்போது, “மாணவர்களின் பொதுத்தேர்வு மற்றும் பண்டிகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இதுபற்றி முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசும்போது, “கட்டாயமாக வாக்களிப்பது பரவலாக சில நாடுகளில் நடைமுறையில் உள்ளது பற்றி முன்பு விவாதித்தோம். ஆனால் இந்த சிந்தனை நடைமுறையில் சாத்தியமில்லை” என்று குறிப்பிட்டார்.

புதன், 19 அக்டோபர், 2016

மஜக சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் ரயில் மறியல்ஆயிரக்கணக்கானோர் கைதாகி விடுதலை…

image
image
image
image
image
image
image
image

img-20161019-wa0008.jpg
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் செய்த மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க கோரியும் விவசாய சங்ககங்களின் சார்பில் இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் ரயில் மறியல் போராட்டத்தை ஆதரித்து இன்று தமிழகம் முழுக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது..

#mjk_rail_roko_cavery_issue

தகவல் : மஜக மாநில ஊடகபிரிவு

கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகளின் குடும்பத்திற்கு 4 வாரத்தில் இழப்பீடு வழங்க உத்தரவு...

கடந்த 2004-ஆம் ஆண்டு, ஜூலை 16-ஆம் தேதி கும்பகோணத்தில் இயங்கிய ஸ்ரீ கிருஷ்ணா, சரஸ்வதி நர்சரி என்ற தனியார் பள்ளிகளில் சமையல் அறையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 பள்ளி குழந்தைகள் தீயில் கருகி பரிதாபாமாக உயிரிழந்தனர். மேலும் 16 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு உரிய இழப்பீட்டை நிர்ணயம் செய்வதற்கு, ஏற்கெனவே ஓய்வுப் பெற்ற சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதன்படி, பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரிடம் விசாரணை நடத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில்,  பள்ளி தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு தலா ரூ.5 லட்சமும், கடும் தீக்காயம் அடைந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.6 லட்சமும், மேலும் 3  குழந்தைகளுக்கு. 5 லட்சமும், சிறிய காயமடைந்த 10 குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரமும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று பரிந்துரையில் நீதிபதி வெங்கட்ராமன் அளித்தார்.

இந்த இழப்பீடு தொகை பொதுமானதாக இல்லை  என தீ விபத்தில் உயிர் இழந்த மற்றும்  பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தரப்பில் தொரிவிக்கபட்டது. மேலும்  இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் இன்பராஜ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய பட்டாது. அந்த மனுவில், மோட்டார் வாகன விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிர்ணயிக்கப்படும் இழப்பீடு தொகையின் அடிப்படையில், நீதிபதி வெங்கட்ராமன் இந்த இழப்பீட்டை நிர்ணயம் செய்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒருவருக்கு உயிர் வாழ உரிமை உள்ளது. இவர்களது உயிரை பாதுகாப்பது அரசின் கடமையாகும். எனவே, தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு என்று நிர்ணயம் செய்து, அந்த தொகையை பெற்றோருக்கு வழங்க வேண்டும். தீ காயத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலா ரூ.20 லட்சம், சிறு காயமடைந்தவர்களுக்கு ரூ.5  லட்சம் இழப்பீடாக நிர்ணயம் செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

கடந்த முறை விசாரணையில், தமிழக அரசு சார்பில் இழப்பீடு தொகை அதிகரிக்க முடியாது, இருப்பினும் இழப்பீட்டு தொகை கேட்டு விண்ணப்பம் செய்த நாளிலிருந்து, 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று நீதிபதி வெங்கட்ராமன் குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், இந்த இழப்பீட்டு தொகைக்கான வட்டியை, தீ விபத்து நடைபெற்ற நாளில் இருந்து கணக்கிட்டு வழங்க வேண்டும். அதுவும் வட்டி தொகையை 9 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை பரிசிலிப்பாக தெரிவிக்கபட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசு பதிலளிக்க ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மனு இன்று  தலைமை நீதிபதி கவுல் ,நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் வட்டியுடன் 2004 ஆண்டில் இருந்து வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இத்தொகையை கடந்த 2004 முதல் 2011 வரை 8 சதவீதமும், 2011 முதல் 2012 வரை 8.6 சதவீதமும், 2012 முதல் 2016 வரை 8.7 சதவீத வட்டியும் கணக்கீட்டு வழங்கப்படுவதாக தெரிவித்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் பாதிக்கபட்ட குழந்தைகளின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையுடன் வட்டியை சேர்த்து நான்கு வாரத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்